தலைவர்கள் ஒரு `டீ’ பேக்!

 

-    சித்தார்த்தன்சுந்தரம்

பிரகாஷ் ஐயர் எழுதி சமீபத்தில் வெளிவந்திருக்கும் புத்தகம் `தி சீக்ரெட் ஆஃப் லீடர்ஷிப்’. இதில்  அவர் தலைவர்களை ஒரு `டீ பேக்’ குடன் ஒப்பிடுகிறார். கூடவே, அதற்கான 8 காரணங்களையும் எடுத்துவைக்கிறார். முதலில், டீ பேக் என்னதான் அழகாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் தேயிலையின் தரம் டீயின் சுவைக்கு எத்தனை முக்கியமோ   அதுபோல தலைவர்களின் புறத்தோற்றத்தைவிட, அவர்களிடம் உள்ள `நம்பிக்கை’ மற்றும் `மனோபாவம்’ தான் முக்கியம். அடுத்து, டீயின் உண்மையான சுவை அதை சுடு தண்ணீரில் போட்டால் தான் கிடைக்கும்.  அதுபோலவே, ஒரு உன்னதமான தலைவரின் சிறப்பியல்புகள் கஷ்டமான காலகட்டத்தில்தான் வெளிப்படும் என்றுகூறும் பிரகாஷ் ஐயர், சிறந்த தலைவராக இருக்கக்கூடியவர்கள் சவால்களை சளைக்காமல் எதிர்கொள்வார்கள் என்பதற்கு `டீபேக்’ தன்னை சுடு தண்ணீரில் எப்படியும் போட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதை உதாரணமாகச் சொல்கிறார்.

தான் வாழ்க்கையில் சந்தித்த, படித்த, அனுபவித்த, உணர்ந்த பல விஷயங்களை 250 பக்கங்களில் 60 குட்டி, குட்டிக் கட்டுரைகளாக தந்திருக்கிறார் கிம்பர்ளி க்ளார்க் என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்நூலாசிரியர். இவருடைய முதல் புத்தகமான `தி ஹாபிட் ஆஃப் வின்னிங்’ விற்பனையில் இமயம் தொட்டது தெரிந்த விஷயம்தான்.

இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருப்பவர், இந்தியக் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் `பெருஞ்சுவர்’ ராகுல் ட்ராவிட்.

நமக்குக் கதை கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், ஒவ்வொரு கட்டுரையையும் கதை போலவே சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. படிப்பதற்கு எளிதாக இருந்தாலும் ஆழமான விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் கூறியிருப்பது இந்தப்புத்தகத்தின் சிறப்பு. ஒவ்வொரு கட்டுரை(கதை)யைப் படிக்கும் போது `அட, இது நம்ம வாழ்க்கையில் கூட நடந்திருக்கிறதே’ என நினைக்கத் தூண்டுகிறது.

நீங்கள் நல்ல தலைவராக வேண்டுமென்றால் கண்டிப்பாக பி.எச்.டி பட்டம் (P H D) பெற்றிருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர். அதெப்பெடி எல்லோராலும் பி.எச்.டி படிக்கமுடியும், வேடிக்கையா இருக்கே, என நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆசிரியர் சொல்லும் பி.எச்.டி, “ Passion, Hunger, Discipline’. அதாவது, வேட்கை, தாகம், ஒழுக்கம் என்ற மூன்றும் இருந்தால் போதும், உலகம் உங்கள் கையில்!

மார்ட்டின் லூதர் கிங், “ஒரு மனிதனை தெருப்பெருக்குபவன் என்று கூப்பிட வேண்டுமென்றால் அவன் மைக்கல் ஏஞ்சலோ எவ்வளவு சிரத்தை எடுத்து பெயிண்டிங் செய்வாரோ அதுபோல சிரத்தையுடன் தெருப்பெருக்குபவனாக இருக்கவேண்டும். அதைப் பார்ப்பவர்கள், “ இங்கே ஒரு அற்புதமான தெருப்பெருக்குபவன் இருக்கிறான், எவ்வளவு சிரத்தையெடுத்து தனது வேலையை செய்திருக்கிறான் பார்’ என்று சொல்ல வேண்டும்’ என்கிறார்.

நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது எல்லாமே. பிரச்னை என்று ஒன்றை நினைத்தால் அது பிரச்னைதான். நீங்கள் ஒருவரை முரடனாகப் பார்த்தால் அவர் நல்லவராக இருந்தாலும் முரடனாகத்தான் காட்சியளிப்பார். ஆக, நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது நம் பார்வையை!

எந்தவொரு பிரச்னைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம். அவைகள் ஒன்றுக் கொன்று முரணாகக் கூட இருக்கும். அதில் உங்களுக்கு அல்லது சூழ்நிலைக்குச் சாதகமாக எது இருக்கிறது என்பதைத் தேர்ந்தெடுத்து அதன்படி நடக்கவேண்டும். வாழ்க்கையில் மிக அரிதாகவே ஒரேயொரு சரியான விடை இருக்கும்.

ஆசிரியர் கிரிக்கெட்டின் ரசிகர் (யார்தான் இல்லை என்கிறீர்களா?!) என்பதால் அவ்வப்போது கிரிக்கெட் ஜாம்பவான்களின் தலைமை குணாதிசயங்களும் இந்தப் புத்தகமெங்கும் ஆங்காங்கே `தல’ காட்டுகிறது எப்படி ரிக்கி பாண்ட்டிங் `சந்து’ (gap) பார்த்து `சிந்து’ (ரன்கள்) விளையாடுவாரோ, அதுபோல, ஃபீல்டர்கள் எனும் தடையை நினைக்காமல், இடைவெளி  (gap) என்கிற வாய்ப்பில் சிந்தனை முழுக்க இருக்க வேண்டும் என்கிறார்.

மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதி என்று புகழப்படும் ஆபிரஹாம் லிங்கன் பல தோல்விகளைக் கண்டவர். சட்டக் கல்லூரியில் சேர நினைத்தார் தோல்வி. வணிகம் செய்ய கடன் வாங்கி, அது சரியாக நடக்காததால் `மஞ்சள் கடுதாசி’ கொடுத்தார், வேலை பார்த்தபோது அந்த வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டார். எட்டு முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வி கண்டார். ஆனாலும் அவர் தனது முயற்சிகளை கைவிடவில்லை. அடி விழ, விழ தனது முயற்சியையும் அதிகரித்தார். இறுதியாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.

கோபமாக இருந்தாலும் வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். வார்த்தைகள் தடித்தால் அது நிரந்தர வடுவை ஏற்படுத்திவிடும். தலைவர்கள் மனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது என வலியுறுத்துகிறார் நூலாசிரியர். 

பிறக்கும்போதே யாரும் தலைவர்களாகப் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் அல்லது உருவாகிறார்கள். ஆசிரியரைப் பொறுத்தவரை அனைவருமே தலைவர்கள், எப்படியென்றால் எல்லோருமே தங்களின் வாழ்க்கையை `லீட்’ செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

ஜான் மேக்ஸ்வெல்லின் மேற்கோளான “நம்பிக்கையில்லாதவன் காற்றை குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; தலைவன் என்பவன் படகின் பாய்மரத்தைச் சரிசெய்து தொடர்ந்து பயணிப்பான்’ என்பதோடு புத்தகத்தை முடிக்கிறார் நூலாசிரியர்.

தலைமைப்பண்பின் ரகசியம் சொல்லும் இந்தப்புத்தகத்தைப் படித்தால் யார் வேண்டுமானாலும் `தல’ ஆகலாம்! 

 

                                  

 

புத்தகம்: தி சீக்ரெட் ஆஃப் லீடர்ஷிப்

ஆசிரியர்: பிரகாஷ் ஐயர்

பதிப்பாளர்: போர்ட்ஃபோலியோ, பெங்குவின்

ISBN: 9780143419839

விலை; ரூ 299

         

 

 

 

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %