இஸ்லாமியர்களின் விவாகரத்தும் காஜி அதிகாரமும்

இஸ்லாமியர்களின் விவாகரத்தும் காஜி அதிகாரமும்

SP. சொக்கலிங்கம்

இந்துக்களும், கிறித்துவர்களும், ஏனையவர்களும் தங்கள் கணவனையோ அல்லது மனைவியையோ விவாகரத்து செய்யவேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்து, விவாகரத்துக்கான காரணத்தைக் கூறி, அதை நிரூபித்து விவாகரத்து பெறவேண்டும். மேலும், கீழ் நீதிமன்றம்/குடும்ப நல நீதிமன்றங்கள் விவாகரத்துக் கொடுத்தாலும் அந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்திலும்,  அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திலும்  மேல்முறையீடு செய்யலாம்.

கிறித்தவர்களுக்கிடையேயான விவாகரத்தைப் பொருத்தவரை கீழ் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டால் அதை உயர் நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உறுதி செய்யவேண்டும். கொலைக் குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதிசெய்ய இரண்டு நீதிமன்றங்கள் போதும், ஆனால் கிறித்துவர்களின் விவாகரத்தை உறுதி செய்ய மூன்று நீதிபதிகள் தேவை என்று இந்திய விவாகரத்து சட்டத்தில் விதி இருந்தது. 2001 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் உறுதி செய்யவேண்டும் என்ற நிலை தேவையில்லை என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இந்து, கிறித்துவ மற்றும் ஏனைய சமூகத்தினர் (இஸ்லாமியர்களைத் தவிர) விவகாரத்து பெற வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல. ஆனால் இஸ்லாமியர்களுக்கு அப்படியில்லை. மூன்று முறை தலாக் சொன்னால் போதும், விவாகம் ரத்தாகிவிடும். நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. விவாகரத்துக்கான காரணத்தைக் குறிப்பிடவேண்டியதில்லை. தங்கள் தரப்பை நிரூபிக்க சாட்சியம் தேவையில்லை. மூன்று முறை தலாக் சொன்னாலே போதும். திருமணம் ரத்தாகிவிடும். இந்துக்கள் போல் இஸ்லாமியர்களுக்கு திருமணம் என்பது ஒரு புனித சடங்கோ அல்லது பந்தமோ கிடையாது. அது அவர்களுக்கு ஒரு ஒப்பந்தம். அவ்வளவே.

மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு ஒரு முஸ்லிம் ஆண், வேறு ஒரு பெண்ணை உடனே திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண் உடனே திருமணம் செய்துகொள்ளக்கூடாது. அவள் “இதத் காலம்” முடிந்த பிறகுதான் வேறு ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ள முடியும். அது என்ன “இதத் காலம்”? ஒரு பெண்ணின் மூன்று மாத மாதவிடாய்க் காலம்தான் “இதத் காலம்”. “இதத் காலம்” முடியும் வரைதான் ஒரு கணவன் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும். அதன்பிறகு தேவையில்லை. அந்தப் பெண் தன்னுடைய பிழைப்பைத் தானே பார்த்துக் கொள்ளவேண்டியதுதான் அல்லது அவள் தாய் வீட்டில் உள்ளவர்களையோ, நெருக்கமான உறவினர்களையோ உதவி கோரலாம். ஏனைய மதத்தைச் சேர்ந்த பெண்கள் மாஜிஸ்திரேட்டிடம் ஜீவனாம்சம் கோரி தங்கள் கணவன்மார்களின் மீது வழக்கு தொடுப்பது போல், இஸ்லாமிய பெண்கள் கேட்கமுடியாது. இந்த விவகாரத்தில் நாட்டை உலுக்கிய ஷா பானு வழக்கு மிகவும் பிரபலம்*.

ஒரு இஸ்லாமியர் ஒரே சமயத்தில் நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். அது சட்டப்படி செல்லுபடியாகும். ஆனால் ஏனைய மதத்தவர்களுக்கு இது செல்லுபடியாகாது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் இருமணம் செய்தால் அவர்களுக்கு (Bigamy - இருதார வாழ்க்கை) 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால், இஸ்லாமியர்கள் நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்தால் ஒரு வேளை அது குற்றமாகுமா என்று யாராவது நினைத்துக்கொண்டால் அது தவறு. நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொண்டால், அந்த ஐந்தாவது திருமணம் ஒழுங்கற்றது (Irregular). அவ்வளவுதான். முந்தைய நான்கு மனைவிமார்களில் யாராவது ஒருவரை தலாக் செய்துவிட்டு ஐந்தாவது பெண்ணை திருமணம் செய்ததை ஒழுங்காக்கிக் கொள்ளலாம் (regular).

தலாக் எப்படி செய்யப்படவேண்டும் என்பதைப் பார்த்து விடுவோம். ஒரு முஸ்லீம் கணவன் தன் மனைவிக்கு ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தலாக்குக்கும் போதுமான அவகாசம் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு தலாக்குக்கும் இடையே மனைவியின் “இதத் காலம்” அளவிலான இடைவேளி விடவேண்டும் என்பது இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினரான சுன்னி பிரிவின் நடைமுறை. இந்தியாவில் சுன்னிபிரிவினர்தான் அதிகம்.

ஒரு தலாக் மற்றும் அடுத்த தலாக்குக்கு இடையேயான அவகாசத்தில், கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் மத்தியஸ்தர்கள் தலையிட்டும் கணவனை சமாதானம் செய்து வைக்கலாம். இந்த அவகாச காலத்தில் கணவனும் மனைவியும் திரும்பவும் கூடி வாழ்ந்தார்கள் என்றால் தலாக் செல்லத்தக்கதல்ல. இரண்டு முறை தலாக் சொல்லியும், அதன் இடைப்பட்ட கால அவகாசத்தில் கணவன் சமாதானம் ஆகாத நிலையில், கணவன் தன் மனைவியிடம் மூன்றாவது முறை தலாக் தெரிவித்தால் அவர்களுக்கிடையேயான திருமண பந்தம் ரத்தாகிவிடும்.

ஆனால் நடைமுறையில் ஒரு தலாக் சொல்வதற்கும் அடுத்த தலாக் சொல்வதற்கும் இடையே கடைபிடிக்கப்படவேண்டிய கால அவகாசத்தை யாரும் பின்பற்றுவதில்லை. மத்தியஸ்தர்கள் வந்து கணவன்மார்களை சமாதானம் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. மூன்று தலாக்கையும் ஒரே சமயத்தில் சொல்லி பல முஸ்லீம் கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை கழற்றிவிடுகின்றனர். இதனால் பல முஸ்லீம் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இஸ்லாமிய மத குருமார்களான காஸிகளும் முறைப்படி நிகழ்த்தப்படாத விவாகரத்துக்கும் அங்கீகாரம் வழங்கி அதற்கான சான்றிதழ்களை வழங்குகிறார்கள்.

சில சந்தர்ப்பங்களில் கணவன் தன் மனைவியிடம் தவறுதலாகவோ அல்லது சுயநினைவின்றியோ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படித்தான் பாகிஸ்தானில் கணவனும் மனைவியும் சேர்ந்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தனர் (நாடகத்திலும் கணவன் மனைவியாக நடித்தனர்). நாடகத்தில் “தலாக், தலாக், தலாக்” என்ற வசனம் இருந்தது. கணவன் நாடகத்தில் வந்த வசனத்தைதான் தெரிவித்தான். விவரம் காஸிக்கு தெரியவே, அவரும், “வசனமாக இருந்தால் என்ன.. நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டாய். எனவே அவள் உன் மனைவி கிடையாது’ என்று தீர்ப்பு கூறினார்.

இம்மாதிரி சூழலில் கணவன் தன் மனைவியை மறுபடி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால், மனைவி வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டு, அந்த ஆண் சுயமாக அந்த மனைவியிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெற்ற பிறகுதான் முதல் கணவனைத் திருமணம் செய்துகொள்ளமுடியும்.

முறைப்படி தலாக் செய்யாமல் மனைவிமார்களை பல கணவன்மார்கள் விவாகரத்து செய்து விடுகின்றனர். அதை காஸிகளும் அங்கீகரித்து திருமணம் முறிந்ததாக சான்றிதழ் வழங்குகிறார்கள். இதனால் பல இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தலாக் செய்வதற்கு கணவன்மார்களுக்கு இஸ்லாத்தின்படி உரிமையுண்டு, ஆனால் அது சரியான முறையில் நடந்தேறியதா என்று முடிவு செய்யவேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்குத்தான் உண்டு. காஸிகளுக்கு இல்லை, காஸிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அதிமுக - வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பதர் சயீத் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர், தமிழக வக்ஃப் வாரியத்தின் முதல் பெண் தலைவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்றமும், திருமதி பதர் சயீத் தாக்கல் செய்த மனு குறித்த பதில் அறிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகின்றன என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் மேட்டர்

* ஷா பானு என்ற சுமார் 62 வயது முஸ்லீம் பெண்மணியை, அவருடைய வழக்கறிஞர் கணவன் முகமது அகமது கான் வீட்டை விட்டு விரட்டி விட்டார். விரட்டப்பட்ட ஷா பானு,  1978 ஆம் ஆண்டு இந்தூர் மாஜிஸ்திரேட்டிடம் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (Criminal Procedure code) 125 வது பிரிவின் படி தன்னுடைய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படி வழக்கு தாக்கல் செய்தார்.ஷா பானு தன்னுடைய பிராதில், தன்னுடைய கணவனின் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000/- என்றும், தனக்கு மாதா மாதம் தன் கணவர் ரூபாய் 500/- ஜீவனாம்சமாக தரவேண்டும் என்று பரிகாரம் கேட்டிருந்தார். வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஷா பானுவை அவரது கணவன் தலாக் செய்துவிட்டார் (இஸ்லாம் படி விவாகரத்து). தன் மனைவியின் வழக்குக்கு பதிலளித்த முகமது அகமது கான், இஸ்லாம் படி விவாகரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு, இதத் சமயத்தில் மட்டும் தான் ஜீவனாம்சம் வழங்கப்படவேண்டும். ஷா பானுவிற்கு இதத் காலம் முடிந்துவிட்டது. மேலும் திருமணத்தின் போது 3000 ரூபாய் மஹர் (இஸ்லாமில் ஆண்கள் பெண்களுக்கு திருமணத்தின் போது தரவேண்டிய அல்லது தருவதாக ஒப்புக்கொள்ளும் மணக்கொடை) தொகையை நீதிமன்றத்தில் ஷா பானுவின் கணக்கில் செலுத்திவிட்டேன். எனவே, ஷா பானுவிற்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டியது இல்லை என்று அவளுடைய கணவன் வாதிட்டான். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகமது அகமது கானின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றவியல் நடைமுறை சட்டம் அனைவருக்கும் பொதுவானது. இஸ்லாமியர்களின் ஷரியத், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தன்னுடைய தீர்ப்பில், ஷா பானுவிற்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். மாத ஜீவனாம்சம் 25 ரூபாய் தனக்கு போதாது என்று கூறி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை, ஷா பானு தாக்கல் செய்தார். மறு ஆய்வு மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், ஷா பானுவின் ஜீவனாம்சத்தை ரூபாய் 25 லிருந்து ரூபாய் 179.20 என்று உயர்த்தியது. உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முகமது அகமது கான், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற தீர்ப்பு சரிதான் என்று கூறி முகமது அகமது கானின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த்து. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 1985 ஆம் ஆண்டு வெளியானது.    

உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லீம்கள் குரல் கொடுத்தனர். தங்களுடைய மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுகிறது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டங்கள் தொடங்கின. கலவரம் வெடித்தது.   அந்த சமயத்தில்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு, தேர்தல் நடந்து முடிந்து, இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தி  தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது.  ஷா பானுவின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்யும் பொருட்டு, ராஜீவ் காந்திஅரசு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லுபடியாகாத வண்ணம் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. அந்த சட்டத்திற்கு The Muslim Women (Protection of Rights on Divorce) Act 1986 1986 < என்று பெயர். இச்சட்டத்தின் படி முஸ்லீம் பெண்கள் ஜீவனாம்சம் கோரி மாஜிஸ்திரேட்டிடம் மனு தாக்கல் செய்தால், மாஜிஸ்திரேட் அந்த முஸ்லீம் பெண்மணியின் சொந்தக்காரர்கள் (கணவனைத் தவிர்த்து), யார் அந்த பெண்மணி இறந்த பிறகு அவருடைய சொத்துக்கு வாரிசுதாரர் ஆகிறார்களோ, அவர்களை அந்தப் பெண்மணிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கலாம். அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு இல்லை என்றாலோ அல்லது இருந்தும் ஜீவனாம்சம் வழங்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இல்லை என்றாலோ, அந்த பெண்மணிக்கு வக்ஃப் வாரியம் (இஸ்லாமிய அறக்கட்டளை) ஜீவனாம்சம் வழங்க மாஜிஸ்திரேட் உத்தரவிடலாம்.  

Read 8084 times
Rate this item
(0 votes)
Published in slideshow
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %