சொந்த சின்னம் VS இரவல் சின்னம்!

சொந்த சின்னம் VS இரவல் சின்னம்!

ராம சரவணன்

சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தல் பெரிய கட்சிகளை எல்லாம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கவைத்ததைப் பார்த்தோம். அதேசமயம், ஒற்றை இலக்கத்தில் வெற்றி பெற்றிருந்த சின்னஞ்சிறு கட்சிகளுக்கு ராஜமரியாதை கிடைத்ததையும் பார்த்தோம். அரசியல் களம் என்பது விநோதங்களால் நிரம்பியது என்பதற்கு இதுவொரு உதாரணம். 

தேர்தலுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, பெரிய கட்சிகள் எவையும்  சிறுகட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். ஒப்புக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்குவதோடு சரி. ஆனால் இம்முறை அந்தக் கட்சிகளுக்கு திடீர் மாலை மரியாதைகள் கிடைத்ததற்குக் காரணம் சின்ன விஷயம்தான். சின்னம்தான் விஷயம்.

சாதியைப் பின்னணியாக வைத்துக்கொண்டு இயங்கும் கட்சிகள், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அல்லது தொகுதிகளில் மட்டும் செல்வாக்கு கொண்ட கட்சிகள், பெரிய கட்சிகளில் இருந்து விலகிய அதிருப்தி மனிதர்கள் போன்றவர்கள் எல்லாம் பெரிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளில் இடம்பிடித்துக் கொள்வார்கள் அல்லது பெரிய கட்சிகளே இவர்களை வெவ்வேறு காரணங்களுக்காகச் சேர்த்துக்கொள்வார்கள். அந்தக் கட்சிகளும் பெரிய கட்சிகள் கொடுக்கும் ஒற்றை இலக்கத் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் நிற்பார்கள்.

அப்போது தங்கள் சொந்தக் கட்சியின் சின்னத்தில் நிற்காமல், பெரிய கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவது சிறுகட்சிகளின் வழக்கம். பிரபலமான சின்னத்தில் நின்றால் வெற்றி வாய்ப்பு எளிதாகிவிடும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. கட்சி வளர்ச்சி எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். வெற்றி மட்டும்தான் அப்போதைய தேவை. வெற்றிபெற்ற பிறகு கட்சியை வளர்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவார்கள்.

 ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு அவர் மேல்பார்வைக்குத்தான் இன்ன கட்சியைச் சேர்ந்தவர். ஆனால் சட்டப்படி அந்தச் சின்னத்துக்குரிய கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார். ஆகவே, அவரால் சட்டமன்றத்தில் சுயமாக எந்தவொரு முடிவையும் எடுக்கமுடியாது. வாக்கெடுப்பு போன்ற நடவடிக்கைகளில் அந்தக் கட்சித் தலைமையின் கட்டளையின்படியே செயல்பட வேண்டியிருக்கும். தவறினால், கட்சித்தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 அப்படி வேறுகட்சியின் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் இடம்பெற்றவர்கள் அநேகம். மயிலாப்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர் ம.பொ. சிவஞானம். அதேபோல, முஸ்லீம் லீக் கட்சியின் அப்துல் லத்தீப் போன்ற தலைவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர். பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான தா. பாண்டியன்கூட இரண்டுமுறை காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் நின்றுதான் வெற்றிபெற்றார்.

 இன்று அதிமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சியின் எம்.எல்.ஏ செ.கு. தமிழரசன் முன்னதாக தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார். தற்போதுகூட இரட்டை இலை சின்னத்தில் நின்றுதான் ஜெயித்துள்ளார். 2001 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில்தான் வெற்றிபெற்றார். இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்பதற்காகப் பிரபலமான சின்னத்தில் நிற்காமல், சொந்த சின்னத்தில் நின்று தோற்றுப்போனவர்களும் உண்டு. உதாரணமாக, 2001 சட்டமன்றத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.எம்.வீரப்பன், உதயசூரியன் சின்னத்தில் நிற்க விரும்பாமல், தொலைக்காட்சி சின்னத்தில் நின்று, தோற்றுப்போனார். இப்படி, சில கட்சிகள் மட்டுமே வென்றாலும் தோற்றாலும் எங்கள் சொந்த சின்னத்தில் அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 அந்த வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், ஃபார்வர்ட் ப்ளாக் ஆகிய கட்சிகள் மட்டும் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டன. ஆனால் அதே கூட்டணியில் இடம்பெற்ற நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன.

 சொந்தச் சின்னத்தில் நின்று, வெற்றிபெற்றதன்மூலம் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் இரண்டுக்கும் சட்டமன்றத்தில் சுதந்தரமாகவும் சுயமாகவும் செயல்பட முடிந்தது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றதால் சரத்குமார் உள்ளிட்ட சிலர் அதிமுக உறுப்பினர்களாகவே கருதப்படுகின்றனர். ஆகவே, அவர்கள் அந்தக் கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.

அந்த அடிப்படையில்தான் சமீபத்திய ராஜ்யசபா தேர்தலின்போது மனிதநேய மக்கள் கட்சியும் புதிய தமிழகமும் சுயமாக முடிவெடுக்க முடிந்தது. எடுக்கப்பட்ட முடிவு சரியான முடிவா, தவறான முடிவா என்பது வேறு விஷயம். ஆனால் நான் எடுக்க வேண்டிய முடிவை என்னால் சுயமாக எடுக்கமுடிகிறதா அல்லது பெரிய கட்சியின் கட்டளைக்கு ஏற்ப எடுக்கமுடிகிறதா என்பதுதான் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம்.

அரசியல் முடிவுகளைச் சொந்தமாக எடுப்பதில்தான் ஒருகட்சியின் சுயமரியாதையும் கௌரவமும் இருக்கிறது. அதற்கு சம்பந்தப்பட்ட கட்சி தனது சொந்தச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். சொந்த சின்னம் சுயமரியாதையைப் பெற்றுத்தரும். இரவல் சின்னம் இகழ்ச்சியைத்தான் தரும் என்பதற்கு சமீபத்திய ராஜ்யசபா தேர்தல் சரியான எடுத்துக்காட்டு.

 

Read 2438 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %