இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பாகம் 2

ஷங்கர் அருணாச்சலம்

ஒரு உலகத்தரமான நிறுவனத்தின் முக்கிய இயல்பு அது எந்த ஒரு தனி மனிதனின் அறிவாற்றலையும் மட்டும் நம்பி இருக்காது என்பதே. இதை ஒப்புக்கொள்ளக்கூடிய முதல் மனிதர் நாராயணமூர்த்தியாகத்தான் இருப்பார். நான் இன்ஃபோசிஸில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளும் தினந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் காதால் கேட்டுக்கொண்டே இருந்தது இதுதான்: "தனி மனிதனின் சிறப்புத்திறன்களைவிட நிறுவனத்தின் செய்முறை நேர்த்தியே முக்கியமானது; ஒரு ஊழியன், அவன் எப்பேர்ப்பட்ட எம்டனாக இருந்தாலும் சரி, வெளியேறினால் நிறுவனத்திற்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை". கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் எல்லா ஊழியர்களுக்கும் சொல்லிவிட்டு, நிறுவனத்தின் தலைமையில் ஒரு பிரச்னை எனும்போது மட்டும் ஒரு தனி மனிதனை, அதுவும் வயதாகி ரிட்டயராகிப்போன ஒரு முதியவரை நம்பி ஓடுவது என்பது முரண்நகை.

எனில், ஏன் இன்ஃபோசிஸ் இதைச் செய்கிறது? கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்லலாம்:

1. நாராயணமூர்த்தி என்ற நாமம்: இது வெறும் பெயர் மட்டுமல்ல. இது ஒரு தர அடையாளம்; ஒரு வர்த்தகச் சின்னம். பணியாளர்களுக்கு ஒரு உற்சாக டானிக். மைசூர் மந்திரக்காரர் வந்துவிட்டார் என்று வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் ஒரு உத்திரவாதம். இந்த உந்துசக்தியில் குறுகிய காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளின் விலை விடுவிடுவென்று ஏற ஒரு சாத்தியம். தரத்தாலும் செய்நேர்த்தியாலும் நம்பர் ஒன் என்று வலம்வந்த ஒரு நிறுவனம் இன்று இம்மாதிரி அருவமான ஆதாயங்களை எதிர்நோக்கி முடிவெடுப்பது பெரிய சோகம்

2. நாராயணமூர்த்தியின் செயல்திறம்: கொள்கைகளை உருவாக்குவது, புதிய யோசனைகளை முன்வைப்பது எல்லாம் சரிதான். அதையெல்லாம் செய்துகாட்டுவதுதான் கடினம். அதில்தான் மூர்த்தி விற்பன்னர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. எனவே அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அவர் புதிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி நிறுவனத்தைத் தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு. இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஏற்கனவே புழக்கத்திலுள்ள கொள்கைகளும் செயல்முறைகளும் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. எனவே, மூர்த்தியைப் போன்ற ஒரு செயல்விற்பன்னர் அவற்றையே சிறப்பாக நடத்திக்காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு.

இவையிரண்டிலும் இரு பிரச்னைகள்: ஒன்று, மூர்த்தியிடம் அப்படிப் புதிய யோசனைகள் இருந்தால் அவற்றை வெளியிலிருந்தோ, அல்லது ஒரு ஆலோசகராகவோ வாங்காமல் அவரை மீண்டும் நிர்வாகத் தலைமை நிலையில் அமர்த்துவது தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமையின் மீது இருக்கும் அதீத நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இரண்டு, அவர் 66 வயது முதியவர். நாளைக்கே அவருக்கு உடல்நிலைக்குறைவு என்று வந்துவிட்டால் கம்பெனியை இழுத்து மூடிவிட்டுக் கட்டிங் அடிக்கப் போய்விடுவார்களா?

3. நாராயணமூர்த்தியின் அனுபவம்: ஏற்கனவே மயிரைக் கட்டி மலையை இழுத்தவர். அதனால் மீண்டும் ஒரு சவாலைச் சமாளிப்பதில் இவரைக்காட்டிலும் சிறந்த ஆள் இருக்க முடியாது என்ற எண்ணம். இதில் கொஞ்சம் பிரமை அடங்கியிருக்கிறது. மூர்த்தி நிர்வகிக்கும்போது நிறுவனத்தில் தற்போது இருப்பதில் 50%க்கும் குறைவான பணியாளர்களே இருந்தனர். இன்ஃபோசிஸ் இன்று செய்யும் வர்த்தகத்தில் ஒரு சிறு பகுதியையே அவரது அனுபவத்தில் பார்த்திருப்பார். இவையல்லாமல், அன்று இவர்களுக்குப் போட்டி மிகக்குறைவு. அதனால் அவர் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார். இன்று இவை எதுவுமே உண்மையில்லை.

 

4. நிறுவனத்தின் தலைமையில் இருக்கும் பிரச்னைகள்: ஷிபுலாலுக்கு அடுத்து நிறுவனத்தை எடுத்து நடத்தத் திறமையுள்ளவர்கள் என்று பி.ஜி.ஸ்ரீனிவாஸ், அஷோக் வெமுரி, பாலா என்கிற பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சொல்கின்றனர். இவர்களிடையே மறைமுகப் போட்டி நிலவுகிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஷிபுலாலுக்கும் கே.வி.காமத்துக்குமே மனஸ்தாபங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வதந்திகள் உண்மையானால் இவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருந்து சரியான நேரத்தில் தலைமை குறித்து சரியான முடிவு எடுக்க இவர்களெல்லோரும் பெரிதும் மதிக்கும் ஒரு ஜாம்பவான் தலைமையில் இருக்கவேண்டும். அது நாராயணமூர்த்தி அல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்!

இன்ஃபோசிஸின் மிகப்பெரிய பலவீனம் மூர்த்தி, நந்தன் போன்ற சிறந்த தலைவர்கள் அவர்களுக்கு அடுத்து வரவேண்டிய தலைமையைச் சரிவர வளர்த்தெடுக்காததே. தான் ரிட்டயராவதற்கு முன்பு செய்யத்தவறியதை இப்போது செய்து பிராயச்சித்தம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார் மூர்த்தி என்றே சொல்லத்தோன்றுகிறது. தான் உருவாக்கி வளர்த்த நிறுவனத்திற்காக இந்த வயதிலும் இதை அவரால் செய்யமுடிகிறது என்பது மிகவும் மதிக்கத்தக்க ஒரு விஷயம்; ஒரு சிறந்த தலைவனுக்கான அடையாளம். ஏதேனும் மாஜிக் செய்து அவரால் இந்நிறுவனத்தைத் திரும்பவும் வெற்றிப் பாதையில்கூடச் செலுத்திட இயலும். ஆனால், அதனால் மட்டுமே அவர் திரும்ப வந்தது சரியான முடிவாகிவிடாது.

வேலையில் சேர்ந்த சில நாட்களில் மூர்த்தி எல்லோரும் கேட்க விரும்பும் அனைத்து விஷயங்களையும் சரியாகச் சொல்லிவருகிறார் - ஒரு ரூபாய் சம்பளம், மூன்றாண்டுகளில் நல்ல மாற்றம் கொண்டுவருவது, சேவைக் கட்டணக் குறைப்பு, சேவை சார்ந்த துறைகளில் அதிகக் கவனம் இன்னபிற. குறுகிய காலகட்டத்தில் இவையெல்லாம் பலன் கொடுக்கவும் செய்யும். ஆனால், இந்திய ஐடி துறையை எதிர்நோக்கியிருக்கும் அடிப்படையான பிரச்னைகளுக்குத் தீர்வாக இவை எதுவுமே இருக்காது.

இன்ஃபோசிஸின் வீழ்ச்சி, என்னதான் அவர்களின் தவறுகளாலேயே தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் இது வரப்போகும் பெரிய தலைவலிகளுக்கு ஒரு கட்டியமே. மற்ற நிறுவனங்கள் மறக்க/மறைக்க விரும்பும் பல கூறுகள் இன்ஃபோசிஸால் வெளிவந்திருக்கின்றன என்பதே உண்மை.

இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயும் லாபமும் வளர்ச்சியும் ஒரே ஒரு விஷயத்தை நம்பி இருக்கின்றன: ஊழியர்களின் எண்ணிக்கை. அதிக வருவாய் வேண்டுமா? லாரிகளில் ஆட்களைக் கொண்டுவந்து நிரப்பு. இதை நீட்டப் பெருக்கம் (linear growth) என்பர். இதில் வெகுகாலம் தாக்குப்பிடிக்க முடியாது. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் இதை நம்பி இல்லை. ஒரு முறை ஒரு மென்பொருள்/வன்பொருள் உருவாக்கிவிட்டால் பிறகு குறைந்த செலவில் அதை மீண்டும் மீண்டும் தயாரித்து விற்று லாபம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் (non-linear growth). ஐபிஎம், டெலாய்ட் போன்ற சேவை நிறுவனங்கள் உயர்மட்ட சேவைகளில் ஈடுபட்டிருப்பதால் ஒரு ஊழியருக்கு அவர்கள் வாங்கும் சேவைக் கட்டணம் நம் நிறுவனங்களைவிடப் பல மடங்கு அதிகம். அதுவுமில்லாமல் அவர்கள் தொடர்ந்து அறிவுசார் சொத்துகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றனர். இவையெல்லாம் non-linear வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

இப்பொழுதே டாடாவின் டி.சி.எஸ்ஸில் இரண்டரை லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். நீட்டப்பெருக்கத்தை நம்பிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு இந்நிறுவனங்கள் பெருத்துவிடும். அப்போது இந்தப் படுகுழியிலிருந்து ரத்தசேதம் இல்லாமல் வெளிவரமுடியாது. இதைச்சரிசெய்ய இன்ஃபோசிஸ் சமீபத்தில் முயன்றது போலப் பிற நிறுவனங்களும் அதிகம் முயற்சி செய்யவேண்டும். ஆனால், ஒவ்வொரு காலாண்டும் "முப்பது சதவிகிதம் லாபம் காட்டு" என்று வெறிகொண்டலையும் பங்குதாரர்களின் உடும்புப் பிடி இருக்கும்வரை பெரிதாக எதுவும் செய்யமுடியாதென்பதே நிதர்சனம். ஒரு நாள் முழுகப்போகும் டைட்டானிக்கின் ரணகளத்தின்மேல் கிளுகிளுப்பாகத் தான் இப்போது பலரும் வலம் வந்துகொண்டிருக்கிறோமோ?

Read 744707 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %