கட்டுரைகள்

கட்டுரைகள் (7)

Sunday, Jul 21 2013

 நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்காக 62 கிலோவாக இருந்த தமது உடல் எடையை 130 கிலோவாக அதிகரித்தார். பாகுபலி 2 படத்திற்காக அவர் இன்னும் 20 கிலோ எடையை அதிகரித்து சுமார் 150 கிலோ தோற்றத்துடன் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. தமது உடல் எடையை அதிகரிப்பதற்காக இன்னும் ஒரு மாதத்திற்கு தினந்தோறும் 50 முட்டை வெள்ளைக்கருவும், அரைக்கிலோ கோழிக்கறியும் சாப்பிடப்போகிறாராம் பிரபாஸ்.

Thursday, Jul 18 2013

அன்னை தெரேசா

Thursday, Jul 18 2013

அமிர்தவர்ஷினி

 நானும் இந்த நூற்றாண்டும். கவிஞர் வாலி தன்னுடைய திரையுலக நினைவுகள் பற்றி எழுதிய புத்தகம். அழகான சம்பவங்களும் சுவாரஸ்யமான எழுத்துநடையும் பின்னிப் பிணைந்த நினைவுக்குறிப்பு நூல். அந்தப் புத்தகத்தை எந்தப் பக்கத்தில் இருந்து வேண்டுமானாலும் படிக்கலாம். எங்கே ஆரம்பிக்கிறோமோ, அந்த இடத்தில் ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்டிப்பாக இருக்கும். 

அந்தப் புத்தகத்தில் தன்னுடன் பழகிய, தான் பழகிய மனிதர்கள் பற்றி பல சம்பவங்களைச் சொல்லியிருப்பார் வாலி. முக்கியமாக, எம்.ஜி.ஆர் பற்றி நிறையவே தகவல்கள் இருக்கும். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என்று பலருடனும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரித்திருப்பார். அவற்றில் பல சம்பவங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

 விஷயம் என்னவென்றால், அந்தப் புத்தகத்தின் எந்தவொரு இடத்திலும் எவரைப் பற்றியும் சர்ச்சையை உருவாக்கும் விதமாகவோ, குறைசொல்லும் விதமாக, மனத்தைக் கஷ்டப்படுத்தும் விதமாகவோ எதையுமே சொல்லியிருக்க மாட்டார் வாலி. சற்றே அளவில் பெரிய புத்தகமாக இருந்தாலும்கூட எந்த இடத்தில் கண்ணியக்குறைவான வார்த்தைகளைலோ, அடுத்தவரை அவமதிக்கும் வார்த்தைகளையோ பயன்படுத்தியிருக்கமாட்டார். 

 கவிஞர் வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்ற புத்தகமும் அதே ரகத்தைச் சேர்ந்ததுதான். மிக சுவாரஸ்யமான புத்தகம். சாமானிய மனிதர்கள் தொடங்கி இளையராஜா, பாரதிராஜா போன்ற பெரிய கலைஞர்களும் பிரபலங்களும் அந்தப் புத்தகத்தில் வருவார்கள். அவர்களைப் பற்றிய வைரமுத்துவின் ஒவ்வொரு வார்த்தையிலும் பக்குவம் தெரியும். சர்ச்சைக்குரிய சம்பவத்தைக்கூட மென்மையான வார்த்தைகளைக் கொண்டு சொல்லியிருப்பார் வைரமுத்து. இப்படி பிறர் மனம் நோகாமல், பிறரை அவமதிக்காமல் பழைய நினைவுகளைப் பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள். திரைத்துறையினர் மட்டுமல்ல, அரசியல் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்தவர்கள் பலரும் தங்களுடைய நினைவுகளைப் புத்தகமாக்கியிருக்கிறார்கள்.

 எதற்காக இத்தனை பீடிகை என்கிறீர்களா?

 சமீபகாலமாக திரையுலகப் பிரபலங்கள் சொல்லுகின்ற விஷயங்கள், எழுதுகின்ற பதில்கள் எதிலும் அவர்களுடைய வயதுக்கும் அனுபவத்துக்கும் வந்திருக்கவேண்டிய பக்குவமோ, மென்மையோ தென்படுவது மாதிரி தெரியவில்லை. ஒன்று, தன்னை உயர்த்துவதற்காக தன் சக கலைஞர்களை தகுதிக்குறைவாகப் பேசுகிறார்கள். அல்லது எதிரிகளுடனான தங்களது பழைய பாக்கியைத் தீர்த்துக்கொள்ள பழைய விஷயங்களை எடுத்துச்சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.

 குமுதம் பத்திரிகையில் வெளியான இளையராஜாவின் பதில்கள், ஆனந்த விகடனில் வெளியான பாரதிராஜாவின் பதில்கள் ஆகிய இரண்டும் அருவருப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தன. முக்கியமாக, இயக்குனர் மணிவண்ணன் பற்றியும் விஜயகாந்த் பற்றியும் பாரதிராஜா சொன்ன செய்திகள் எதுவும் ரசனைக்குரியதாக இல்லை.  உண்மையில், இதுபோன்ற செயல்களும் பதில்களும் சம்பந்தப்பட்ட கலைஞர் மீதான நம்முடைய மதிப்பைக் குறைக்கவே செய்கிறது என்பதுதான் நிஜம். ஆகவே, அந்தப் பிரபலங்களுக்கு ஒரேயொரு கோரிக்கை.

 உள்ளொன்று வைத்து உண்மை பேசாதீர்கள்!

 காரணம், உங்களை, உங்கள் திறமையை, உங்கள் சாதனைகளை மெச்சினோம். மெச்சிக்கொண்டிருக்கிறோம். மெச்ச விரும்புகிறோம். புரிந்துகொள்ளுங்கள்.

Tuesday, Jul 16 2013

ஷங்கர் அருணாச்சலம்

ஒரு உலகத்தரமான நிறுவனத்தின் முக்கிய இயல்பு அது எந்த ஒரு தனி மனிதனின் அறிவாற்றலையும் மட்டும் நம்பி இருக்காது என்பதே. இதை ஒப்புக்கொள்ளக்கூடிய முதல் மனிதர் நாராயணமூர்த்தியாகத்தான் இருப்பார். நான் இன்ஃபோசிஸில் காலடி எடுத்துவைத்த நாளிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளும் தினந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் காதால் கேட்டுக்கொண்டே இருந்தது இதுதான்: "தனி மனிதனின் சிறப்புத்திறன்களைவிட நிறுவனத்தின் செய்முறை நேர்த்தியே முக்கியமானது; ஒரு ஊழியன், அவன் எப்பேர்ப்பட்ட எம்டனாக இருந்தாலும் சரி, வெளியேறினால் நிறுவனத்திற்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை". கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் எல்லா ஊழியர்களுக்கும் சொல்லிவிட்டு, நிறுவனத்தின் தலைமையில் ஒரு பிரச்னை எனும்போது மட்டும் ஒரு தனி மனிதனை, அதுவும் வயதாகி ரிட்டயராகிப்போன ஒரு முதியவரை நம்பி ஓடுவது என்பது முரண்நகை.

எனில், ஏன் இன்ஃபோசிஸ் இதைச் செய்கிறது? கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்லலாம்:

1. நாராயணமூர்த்தி என்ற நாமம்: இது வெறும் பெயர் மட்டுமல்ல. இது ஒரு தர அடையாளம்; ஒரு வர்த்தகச் சின்னம். பணியாளர்களுக்கு ஒரு உற்சாக டானிக். மைசூர் மந்திரக்காரர் வந்துவிட்டார் என்று வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் ஒரு உத்திரவாதம். இந்த உந்துசக்தியில் குறுகிய காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளின் விலை விடுவிடுவென்று ஏற ஒரு சாத்தியம். தரத்தாலும் செய்நேர்த்தியாலும் நம்பர் ஒன் என்று வலம்வந்த ஒரு நிறுவனம் இன்று இம்மாதிரி அருவமான ஆதாயங்களை எதிர்நோக்கி முடிவெடுப்பது பெரிய சோகம்

2. நாராயணமூர்த்தியின் செயல்திறம்: கொள்கைகளை உருவாக்குவது, புதிய யோசனைகளை முன்வைப்பது எல்லாம் சரிதான். அதையெல்லாம் செய்துகாட்டுவதுதான் கடினம். அதில்தான் மூர்த்தி விற்பன்னர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. எனவே அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அவர் புதிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி நிறுவனத்தைத் தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு. இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஏற்கனவே புழக்கத்திலுள்ள கொள்கைகளும் செயல்முறைகளும் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. எனவே, மூர்த்தியைப் போன்ற ஒரு செயல்விற்பன்னர் அவற்றையே சிறப்பாக நடத்திக்காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு.

இவையிரண்டிலும் இரு பிரச்னைகள்: ஒன்று, மூர்த்தியிடம் அப்படிப் புதிய யோசனைகள் இருந்தால் அவற்றை வெளியிலிருந்தோ, அல்லது ஒரு ஆலோசகராகவோ வாங்காமல் அவரை மீண்டும் நிர்வாகத் தலைமை நிலையில் அமர்த்துவது தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமையின் மீது இருக்கும் அதீத நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இரண்டு, அவர் 66 வயது முதியவர். நாளைக்கே அவருக்கு உடல்நிலைக்குறைவு என்று வந்துவிட்டால் கம்பெனியை இழுத்து மூடிவிட்டுக் கட்டிங் அடிக்கப் போய்விடுவார்களா?

3. நாராயணமூர்த்தியின் அனுபவம்: ஏற்கனவே மயிரைக் கட்டி மலையை இழுத்தவர். அதனால் மீண்டும் ஒரு சவாலைச் சமாளிப்பதில் இவரைக்காட்டிலும் சிறந்த ஆள் இருக்க முடியாது என்ற எண்ணம். இதில் கொஞ்சம் பிரமை அடங்கியிருக்கிறது. மூர்த்தி நிர்வகிக்கும்போது நிறுவனத்தில் தற்போது இருப்பதில் 50%க்கும் குறைவான பணியாளர்களே இருந்தனர். இன்ஃபோசிஸ் இன்று செய்யும் வர்த்தகத்தில் ஒரு சிறு பகுதியையே அவரது அனுபவத்தில் பார்த்திருப்பார். இவையல்லாமல், அன்று இவர்களுக்குப் போட்டி மிகக்குறைவு. அதனால் அவர் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார். இன்று இவை எதுவுமே உண்மையில்லை.

Tuesday, Jul 16 2013


ஷங்கர் அருணாச்சலம்

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி திரும்ப வந்திருக்கிறார். அறுபது வயது வரை சர்வீஸிலிருந்த குடும்பத் தலைவன், குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் பல்லாண்டுகள் சளைக்காமல் செய்துவிட்டு, ஒரு வழியாக ரிட்டயராகி, தான் பெற்ற மக்கள் இனி குடும்ப பாரத்தைச் சுமப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இளைப்பாற முயலும் சமயத்தில் அவரிடம் போய், "ஐயா! உங்கள் குடும்பம் சமாளிக்க இயலாமல் திணறுகிறது. நீங்கள்தான் மறுபடியும் வேலைக்குப்போய் இவர்களைக் கடைத்தேற்ற வேண்டும்" என்று சொல்வதற்கு நிகரானது இது.

ஐடி உலகத்தின் ஜாம்பவான்களில் ஒன்றான இன்ஃபோசிஸுக்கு இப்படி ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? லட்சம் பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்துக்கு ஒரு பிரச்னை எனும்போது அதைச் சரிசெய்ய அங்கே ஒரு தலைவன் கூடவா இல்லை? சரிசெய்ய இயலாத அளவுக்கு அப்படி என்னதான் ஆயிற்று?

இந்திய ஐடி கம்பெனிகளில் முதலிடம், பில்லியன் டாலர் வருமானம், அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பதிவு, உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர் தாமஸ் ஃப்ரெய்ட்மன் அவரது புத்தகத்தில் அள்ளித்தந்த இலவச விளம்பரங்கள் - இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதே நாராயணமூர்த்தியின் தலைமையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த நிறுவனம்தான் இன்ஃபோசிஸ். அவுட்சோர்சிங் துறையில் மிகவும் மதிக்கப்பட்டதோடு, போற்றத்தக்க விழுமியங்களும், தொழிலில் மிகுந்த நேர்மையும், தார்மீகப் பொறுப்பும் கொண்ட நிறுவனம் என்றும் பெயர்பெற்றிருந்தது. ஊழியர்களை மதிப்புடன் நடத்தி, அவர்களது நலனில் அக்கறை காட்டும் நிறுவனம் என்று போனஸ் நற்பெயர் வேறு.

ஒரு நிறுவனம் தனக்குத் தேவையான ஒரு பொருளை / வேலையை இன்னொரு நிறுவனத்திடம் கொடுத்துச் செய்துகொள்வதை அவுட்சோர்சிங் (outsourcing) என்கின்றனர். ஒரு நிறுவனம் தனது வேலையை இன்னொரு வெளிநாட்டுக்கு அனுப்பிச் செய்துகொண்டால் அதை ஆஃப்ஷோரிங் (offshoring) என்கின்றனர். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் பொதுவான அவுட்சோர்சிங்கில் கவனம் செலுத்த, இன்ஃபோசிஸ் குறிப்பாக ஆஃப்ஷோர் அவுட்சோர்சிங்கில் தன் திறமையை வளர்த்துக் கொண்டது.

Thursday, Jul 04 2013

தி. செங்குட்டுவன்


பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. அதிகாரப்பூர்வமாக இப்படியொரு அறிவிப்பு வராதது மட்டும்தான் பாக்கி. மற்றபடி, அவரை முன்னிறுத்தும் அத்தனைக் காரியங்களையும் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தலைமை. அதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராகிவிட்டது அந்தக் கட்சி என்பதற்கான அடையாளங்கள்தான் மூத்த தலைவர் அத்வானி நடந்துகொள்ளும் முறையும் அவரிடம் கட்சி நடந்துகொள்ளும் முறையும்.

முக்கியமாக, பாஜகவின் நெருக்கமான கூட்டணிக் கட்சியான நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமே கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டது. ஆனாலும் மோடியை முன்னிறுத்துவதில் இருந்து பாஜக இம்மியளவும் பின்வாங்கவில்லை.
மாறாக, முன்பைக் காட்டிலும் அதிக வேகத்துடன் நரேந்திர மோடியைப்  பிரபலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இந்தியாவைக் காப்பாற்ற மோடியால் மட்டுமே முடியும். குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற மோடியால்தான் நாளைய இந்தியாவையும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்லமுடியும். மோடிக்கு மட்டுமே இந்தியா முழுக்க
செல்வாக்கு இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மோடியின் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்தான் நாளைய பிரதமர் என்ற பிரசாரத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே செய்யத் தொடங்கிவிட்டது பாஜக தலைமை.

அதன் ஒருபகுதியாக தற்போது நவீன தொழில்நுட்பமான இண்டர்நெட்டையும் வலைத்தளங்களையும் சமூக இணையத்தளங்களையும் மோடிக்கு ஆதரவாகப் பயன்படுத்தத் தயாராகி இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. அதற்கு முக்கியமான காரணம், சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்தியாவின் கணிசமான மக்களவைத் தொகுதிகளின் வெற்றியை நிர்ணயிக்க இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களே என்று குறிப்பிடப்பட்டதுதான்.

குறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக இணையத்தளங்களின் வழியாக மோடிக்கு ஆதரவான மனநிலையை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அந்தப் பணிக்காக ஏழாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைத் தேர்வுசெய்து, அவர்களை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஈடுபடுத்தத் தயாராகியுள்ளது பாஜக தலைமை.

அவர்களைக் கொண்டு நரேந்திர மோடியைப் பற்றிய நேர்மறை விவாதங்களை
சமூக வலைத்தளங்களுக்குள் உருவாக்குவது, மோடியைப் பற்றிய பாசிட்டிவான கருத்தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் உருவாக்குவது, மோடியின் குஜராத் சாதனைகளை எடுத்துச்சொல்லி, அதன்மூலம் மோடியைப் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பதுதான் பாஜகவின் திட்டம்.

சமீபத்தில் உலக நாடுகள் சிலவற்றில் நடந்த அரசுக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் மற்றும் ஆட்சி மாற்றங்களில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு இருப்பதை மறுக்க முடியாது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பயன்படுத்தும் முக்கியமான பிரசார உத்திகளுள் ஒன்று, சமூக இணையத்தளங்களைப் பயன்படுத்துவது. இன்று தமிழ்நாட்டின் உள்ள முக்கியக் கட்சிகள்கூட தங்களுக்கென்று பிரத்யேக பக்கங்களை சமூக வலைத்தளங்களுள் உருவாக்கிவிட்டன. ஆகவே, அத்தகைய சக்தி படைத்த தொழில்நுட்பத்தை மோடிக்கு ஆதரவான பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

அதேசமயம், இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். இணையத்தளமோ, வலைத்தளமோ எதுவாக இருந்தாலும் அது மோடிக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அவரை எதிர்ப்பவர்களும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். மோடிக்கு ஆதரவாக எதை வேண்டுமானாலும் சொல்லலாம், அவற்றை எல்லாம் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், மோடிக்கு ஆதரவான வருகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்வினை ஆற்றுவதற்கு மோடி எதிர்ப்பாளர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி ஆதரவுப் பிரசாரம் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இன்னொரு பக்கம் மோடி எதிர்ப்புப் பிரசாரமும் நடக்கும். ஆகவே, சமூக வலைத்தளங்களில் ஊடுருவி விடுவதன்மூலமே மோடியைப் பிரதமராக்கிவிட முடியாது. முடியும்
என்று பிடிவாதம் காட்டினால் பிடி நழுவுவதை யார்தான் தடுக்கமுடியும்?

 

  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
Page 1 of 2

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %